Monday, July 24, 2017

The Tuner of Silences - Mia Couto


மியா கோட்டோ ஆப்பிரிக்க இலக்கியத்தில் தவிர்க்க முடியாத எழுத்தாளர் . போர்ச்சுகீசிய பெற்றோருக்கு மொசாம்பிக்கில் பிறந்தவர் .காலனிய அரசியலை எதிர்ப்பவர் .காமோஸ் (Camoes) மற்றும் நியூஸ்டேட்ட் (Neustadt) இலக்கிய விருதுகளைப் பெற்றவர் .இவரின் நூலொன்று  சமீபத்தில்  ஆங்கில மொழியாக்கத்தில் வெளிவந்தது .அதன் பெயர்   "தி டியூனர் அப் சைலென்ஸ் ".
He who seeks eternity should look at the sky, he who seeks the moment, should look at the cloud
இந்த கதை இரண்டு கதாபாத்திரங்களால் சொல்லப்படுகிறது .முதலாவது சிறுவன் (Mwanito) மவானிட்டோ தனது வாழ்க்கையை சொல்லுகிறான். அவனும் அவனது அண்ணன் மற்றும் தந்தை சில்வெஸ்டர் விட்டலிசியோ  ஒரு பாதுகாக்கப்பட்ட காட்டுக்குள் வாழ்கிறார்கள் . அவனது தந்தை அந்த இடத்தை ஜெசூசலேம் (Jezoosalem) என்று அழைக்கிறார். அந்த நிலத்தில் அவர்கள் மட்டுமே வாழ்கிறார்கள். அவர்களின் வெளியுலக தொடர்பு அவர்களின் மாமா மட்டுமே. மவானிட்டோவிற்கு அதுவே உலகம். அங்கு சில்வெஸ்டர் விட்டலிசியோ அவர்களை கொடுமைப்படுத்தி ஒரு ராணுவ ஆட்சி போல் ஆட்சி செய்கிறார். அவர் அவர்களை எழுதவோ படிக்கவோ அனுமதிக்கவில்லை. வெளியுலகில் யாரும் இல்லை  என்று அவர்களை நம்பவைக்கிறார். விட்டலிசியோ இங்கு வந்தவுடன் அனைவரின் பெயரையும் மாற்றினார் ஆனால் மவானிட்டோவிற்கு மட்டும் மாற்றவில்லை.

மவானிட்டோ  தான் தந்தை சொல்வதைக் கேட்பதற்கே பிறந்தவன் என்று நம்புகிறான். அவன் தந்தையும் மூத்த மகனைவிட மவானிட்டோமே அனைத்தையும் பகிர்கிறார். அவனின் அமைதி தனக்கு ஆறுதல் தருகிறது என்று அவர் நம்புகிறார்.மணிக்கணக்கில் அவனிடம் பேசுகிறார் .  மவானிட்டோவிற்கு தன் தாயைப் பற்றி பல கேள்விகள் -அவள் எப்படி இருப்பாள் ,அவளது குரல் எப்படி இருக்கும். அவன் இந்த கேள்விகளை சில்வெஸ்டர் விட்டலிசியோவிடம் கேட்டதே இல்லை.
Love is a territory where orders can't be issued
 அவர்களின் இந்த அமைதியான வாழ்க்கை மார்தா  (Marta) என்ற பெண்ணின் வருகையால் பாதிக்கப்படுகிறது. மவானிட்டோ அவன் அம்மாவிற்கு பிறகு பார்த்த முதல் பெண்  மார்தா. அவன் அவளை அம்மாவாக பார்கிறான். அதற்க்கு எதிர்மாறாக அவனது அண்ணன் மார்தாவை கனவு பெண்ணாக காதலியாகப்  பார்கிறான். அவளின் வருகை சில்வெஸ்டர் விட்டலிசியோவிற்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.அவளை எச்சரிகிறான். மார்தா தனது கணவனைத் தேடி ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்கா வந்தவள். மார்தா தன் கதைச் சொல்கிறாள்.அவளது கதையும் துயரமானதுதான். அவள்  ஜெசூசலேம்  தனது அடையாளத்திருந்து  விடுதலை அளிக்கிறது என்று நினைக்கிறாள்.

இரண்டு வெவ்வேறு உலகங்கள் சந்திக்கையில் , நான் எதிர் பார்த்தது போல, ஜெசூசலேமைவிட்டு அவர்கள் வெளியே வருகிறார்கள் .அங்கு வந்த பிறகுதான் மார்தா தன் கணவன் இறந்துவிட்டான் என்று தெரிகிறது. மவானிட்டோவிற்கோ அது ஒரு மறுபிறப்பு ,பிற மனிதர்களை பார்கிறான். தன் தாயைப் பற்றி அறிகிறான். அவன் ஒருபோதும் அவனது தந்தையை விட்டு பிரியவில்லை.

ஏன் ஒரு தந்தை தனது இளம் மகன்களை இப்படி மக்களே இல்லாத ஒரு இடத்திற்கு கொண்டு செல்கிறார்? மனைவின் இறப்பிற்கு பிறகு இந்த உலகத்தின் மீது இருந்த கோவம் ? அவருக்கு  இந்த உலகம் ஒரு கழிவு. அக்கழிவில் இருந்து மீள அவருக்கு வேறு வழி தெரியவில்லை . இந்த கதையின் முக்கியமான ஒன்று ஆசிரியரின் அந்த நிலத்தின் வர்ணனை. ஒவ்வொரு அத்தியாயங்களும் ஒரு கவிதையுடன் தொடங்குகிறார். இக்கவிதைகள் இக்கதைக்கு பெரும் வலிமை சேர்க்கிறது. கோட்டோவின் எழுத்துநடை வாசகரை கதையில் ஒரு அங்கமாகவே மாற்றுகிறது என்றால் மிகையாகாது.

இந்த புத்தகம் மனிதன் தனக்கொரு எல்லையைத்  திணித்துக்கொள்வதும் அதை மீறுவதற்கு ஏற்படும் ஆசையைப் பற்றி பேசுகிறது. தந்தை எல்லையைத் திணிப்பதும்  மகன்கள் அதை மீற நினைப்பதுவும்தான்  கதை. இந்த மொத்தக்கதையையும் ஒரு "allegory" என்றும் எடுத்துக்கொள்ளலாம். மொசாம்பிக்கின் சமீபத்திய வரலாறு அதற்கு சான்று.

வாசிக்க வேண்டிய புத்தகம். 

1 comment:

Karnan said...

intha books ah la nanga online enga padikka mudiyu nu soningana useful ah irukum